Saturday, October 1, 2011

சித்திரக்கதைகள்

நேற்று எங்கள் நிறுவனத்தின் முதலாளியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். பேச்சு வியாபாரம்,வெற்றிகள்,தோல்விகள்,அடுத்து செய்ய வேண்டியவை என்று நீண்டு கொண்டே போய் நவராத்ரியில் முடிந்தது..அதிலும் தொடர்ந்து கொண்டு மகாபாரதத்தில் வந்து நின்றது..மகாபாரதத்தின் கதைகள்,கிளை கதைகள் பற்றி நிறைய விவாதித்தோம்.மகாபாரதத்தை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது முதலாளி எப்படி இந்த இளம் வயதில் மகாபாரதம் பற்றி இவ்வுளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று ஆச்சர்யமாக கேட்டார்..


"அம்மா சின்ன வயதில் நான் தூங்குவதற்காக சொல்வார்கள்",என்றேன்.

'ம்' என்றவர், "என்னுடைய அக்கா பையன் எப்போதும் வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டே  இருக்கிறான். அவனுக்கு கதைகள் சொல்லி பழக்கபடுத்து என்று அக்காவிடம் சொன்னேன். அவன் கேட்பதாக இல்லை என்றாள்".

நான், "உண்மைதான் .இப்போதுள்ள குழந்தைகள் அப்படி. குழந்தை பேசத்தொடங்கும்போதே இதிகாசங்கள் பற்றி புகட்ட வேண்டும்.எனக்கு அம்மா கொஞ்ச காலம் சொன்னார்.பிறகு நானாக இதிகாசங்கள்,புராணங்கள்  தேடி படித்து கொண்டேன்."


அவர்,"ம்ம்,இப்போது கூட மகாபாரத,ராமாயண,விக்கிரமாதித்தன் கதைகள் சிடி வடிவில் வருகின்றன. அதை கூட பார்க்க பழக்கலாம்."

நான்,"ம்ஹூம்,தவறு என்றேன்"

"ஏன்?", அவர்

"குழந்தைகளுக்கு கதைகள் பார்க்க சொல்லுவதைவிட கேட்க சொல்லுவது தான் நல்லது..ஏன் எனில், கேட்கும் போது குழந்தைகள் "குண்டலம் என்றால்  என்ன?, அது எப்படி இருக்கும்?, அஸ்திரம் எவ்வாறு இருக்கும்?, ராவணன் பத்து தலைகளை வைத்து கொண்டு எப்படி ஒருக்களித்து படுப்பார்? போன்ற கேள்விகளை எழுப்புவார்கள்.அவர்களுக்கு நாம் பதில் சொல்லும் போது அவர்கள் அந்த பதிலை கற்பனை செய்து பார்ப்பார்கள்.இதன் மூலம் அவர்களுடய கற்பனை திறனை வளர்க்கலாம்.எதிர் காலத்தில் அறிவியல்,கலை போன்றவற்றில் தங்கள் சொந்த கற்பனைகளை அவர்கள் முயற்சி  செய்வார்கள்."(தமிழ் சினிமாவுக்கும் காப்பி அடிக்காத படங்கள் கிடைக்கும்.)

மாறாக சிடி மூலம் குழந்தைகள் கதைகளை பார்த்தால் கதைகளை,நீதிகளை தெரிந்து கொள்ளலாம்.ஆனால் கற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு அமையாது.
திரையில் என்ன தெரிகிறதோ அதை மட்டுமே எண்ணுவார்கள்,கற்பனை செய்வார்கள்.அதில் தோன்றும் பாத்திரங்கள் எல்லா குழந்தைகளின் மனதிலும் ஒரே அமைப்பாக பதியும்."என்றேன்.

"கதை சொல்லும்  பாட்டிகள், தாத்தாக்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விட்டோம்.நமக்கு பணத்தை தவிர வேற எதுவும் தெரியாது.. சரி வேறு என்னதான் செய்யலாம்?" என்று கேட்டார்.

"நான் சிறு வயதில் என்  மாமா வீட்டிற்கு விடுமுறை சென்றபோது கதை நூல்கள் பலவற்றை படித்தேன்.எடுத்துகாட்டு மகாபாரதத்தில் உள்ள கிளை கதைகள், தெனாலி ராமன் கதைகள்.இவை யாவும் சித்திரங்கள் மற்றும் வசனங்கள் சேர்ந்த சித்திரக்கதைகளாக இருந்தன.(சிறுவர்மணி,சிறுவர்மலரில் வரும் படக்கதைகள் போல்). இவ்வகை கதைகள் கதை சொல்லிகள் இல்லாத இடத்தை நிரப்பும்.மேலும் இவ்வகை கதைகள் ஒரு காட்சியில் இருந்து  மற்றொரு  காட்சிக்கு தாவும் போது, இடையில் இருக்கும் வெற்றிடத்தை குழந்தைகள் தங்கள் கற்பனையால் நிரப்ப வாய்ப்பு கிடைக்கும் .இம்மாதிரி கதைகள் தான் என்னுடைய கற்பனைகளை வளர்த்தன (என்று நான் நம்புகிறேன்??).

சிறு வயதில் நான் படித்த சித்திரக்கதைகள் "கதைக்களம்" (பெயர் சரியாக் நினைவில்லை) என்ற பெயரில் மாதமொருமுறை வெளிவந்தது. மாமா அவற்றை சேகரித்து வைத்திருப்பார்.விடுமுறைக்கு செல்லும் போது அவற்றை ஒரே மூச்சாக படித்து விடுவேன்.சந்தேகங்களை மாமாவிடம் கேட்பேன் .பொறுமையாக பதில் சொல்லுவார்."

"மகிழ்ச்சி", என்றார் முதலாளி.. 

அத்தோடு மணி பத்து ஆகிவிட்டதால் வீட்டுக்கு கிளம்ப சொன்னார்.விடை பெற்று கொண்டு பேசிக்கொண்டு இருந்ததை சிந்தித்தபடியே வந்தேன்.அப்போது சட்டென "நாம் என் சித்திரக்கதைகள் எழுத முயற்சிக்க கூடாது என்று தோன்றியது". சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் ஆசை இருக்கிறது..


3 comments:

சுகி said...

உண்மை தான் .பார்த்தலை விட கேட்டலும் , வாசித்தலும் கற்பனை திறனை வளர்க்கும் .ஐன்ஸ்டீன் இன் கூற்று ' அறிவியலை விட கற்பனை சிறந்தது ' .ஆனால் இப்போது நிலைமையே நேர்மாறு .குழந்தைகள் கேட்க்க விரும்புகிறார்களோ இல்லையோ பெற்றவர்கள் சொல்ல விரும்புவதில்லை .

சுகி said...

சித்திர கதைகள் தாராளமாக எழுதுங்கள் .குழந்தைகளை புரிந்து கொண்டால் உலகத்தை புரிந்து கொள்ளலாம் .எதிர்காலத்தில் பல வகைகளில் இந்த அனுபவம் கை கொடுக்கும் .வாழ்த்துக்கள் கார்த்தி

கார்த்தி said...

மிக்க நன்றி சுகி..
முயற்சிக்கிறேன் ...

Post a Comment

உங்கள் கருத்துக்கள்